Thursday, July 16, 2009

மூன்றாம் கை

எனக்கு மூன்று கைகள். நம்பிக்கை, தும்பிக்கை - என்று, அமெச்சூர் கவிதை முயற்சியெல்லாம் இல்லை. நிஜமாகவே எனக்கு மூன்று கைகள்.

இரண்டாண்டுகளுக்கு முன், இயற்பியல் இளங்கலை பட்டப்படிப்பின் இறுதியில், ஒரு நாள் ஹெச்.ஓ.டி.-யிடம் லேபில் ப்ராக்டிகல் நோட்டை சரிவர வைத்துக் கொள்வதில்லை என்பதற்காகத் திட்டு வாங்கினேன். கோபத்தில் செமினார் ஹாலுக்குப் போய், அங்கிருந்த ஜன்னல் கண்ணாடியில் ப்ரொஃபசர் முகம் தெரிய, வலது கை முஷ்டியால் ஒரே குத்து. கண்ணாடி உடைந்து, என் உள்ளங்கையிலிருந்து உள் மணிக்கட்டு வரை ரத்த கிழிசல். அதன் விளைவு கொஞ்சம் கொஞ்சமாக விபரீதமானது.

முதலில் விரல்கள் செயலிழந்தன. ஒரு முக்கிய நரம்பு அறுந்துவிட்டதால் ஆபரேஷன் செய்ய நேர்ந்தது. அது தவறாக செய்யப்பட்டுவிட முழங்கையையும் அசைக்க முடியாமல் போய் தோள்பட்டை வரை மரத்துப் போனது. அந்த ப்ரைவேட் ஹாஸ்பிடல் மீது வழக்கு போட்டு இருக்கிறேன். நஷ்ட ஈட்டுத் தொகை வந்து விடும் போலத்தான் இருக்கிறது. ஆனால் கை தான் சரியான பாடில்லை.

இந்த சம்பவங்களுக்குப் பிறகு ஒரு நாள் டாக்டர் சத்யமூர்த்தியை சந்திக்க நேர்ந்தது. அவர் சமீபத்திய அமெரிக்க ரிடர்ன் டைப். ப்ளாஸ்டிக் சர்ஜன். மாமாவின் சினேகிதர். பரஸ்பர அறிமுகம், நலம் விசாரிப்பிற்குப் பிறகு என் நிலையை ஆராய்ந்துவிட்டு அவரும் 'கை கழுவி விட்டார்'. பிறகு அவரே தான் கேட்டார், "இன்னொரு கை வளர்த்துக்கிறயா?" "சார் ... ", என்றேன். அவருடைய பரிசோதனை முயற்சிக்கு உடன்பட்டேன். அதன் பின் நிகழ்ந்தது சரித்திரம்.

உலகின் முதல் டெஸ்ட் ட்யூப் கை வளர்க்கப்பட்டது. என்னுடைய செல்களையே பயன்படுத்தி ஒரு மாற்று எலும்பு உருவாக்கப்பட்டது. என் தோலை கொஞ்சம் போல சீவியெடுத்து, எலும்பை தோல் பரப்பிற்குள் வளர்த்தனர். அது என் தோலில் நடப்பட்டது. வேலையற்ற அந்த இன்னொரு கையை அகற்றாமல், இருந்துவிட்டு போகட்டுமே என்று விட்டுவிட்டேன். நாளடைவில் அந்தக் கை தானே குணமாகி இயல்பாக இயங்கியது.

இந்த விஷயம் வெளியுலகிற்குத் தெரியப்படுத்தப் படவில்லை. காரணம் முயற்சி முழு வெற்றி இல்லை. செயற்கை கை முழுக்கவே ஒரு மெல்லிய வலி இருந்து கொண்டே இருந்தது. என் மூன்றாம் கையை சட்டைக்குள் விட்டுக் கொண்டுதான் வெளியே நடமாடினேன்.

இந்த மூன்றாம் கையால் இப்போது நிறைய உபயோகங்கள். வலக்கையால் வலக்காதையும், இடக்கையால் இடக்காதையும், மூன்றாம் கையால் மூக்கையும் குடையலாம். இரண்டு கைகளையும் தட்டிக் கொண்டே மறுகையால் விசிலடிக்கலாம் ... இப்படியாக ... ஆனால் ஒரு முறை இந்த மூன்றாம் கை என் உயிரையே காப்பாற்றியது.

அன்று முழுக்கவே கையில் வலி இல்லை. அலுவலகத்தில் இருந்து சம்பளப் பணத்தோடு திரும்பிக் கொண்டிருந்தேன். அந்த சாலை வழக்கம் போல ஆள் நடமாட்டம் அற்று இருந்தது. ஒரு ஆசாமி, டீசண்டாகத்தான் இருந்தான் பார்ப்பதற்கு, லிஃப்ட் கேட்டான். நிறுத்தி அவனை ஏற்றிக் கொண்டு சற்று தூரமே நகர்ந்திருப்பேன். என் கழுத்தை ஒரு சங்கிலி இறுக்கியது. அவன் தான். அயோக்கியன். என் ஹோண்டா ஸ்பெலண்டர் தடுமாறியது. ரோட்டோ ரக் குப்பைத் தொட்டியில் மோதியது. அவனும் தடுமாறினான்.

இப்போது நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டோ ம். என்னை விட பலசாலியாகத் தெரிந்தான். தன் இடது கையில் உள்ள சங்கிலியை என் மீது சுழற்றினான். என் இடது கை தடுத்தது. பேண்ட் பாக்கெட்டில் இருந்து வலது கையில் ஒரு கத்தியை எடுத்து வீசினான். என் வலது கை தடுத்தது. மல்யுத்த வீரர்கள் மாதிரி நாங்கள் போராடத் துவங்கினோம்.

அவன் தன் காலால் என் வயிற்றில் உதைத்தான். லாவமாக சண்டையிடத் தெரியாத என்னை அவன் எளிதில் வீழ்த்தினான். அந்த சங்கிலியினாலேயே என் கைகளைக் (இரண்டை மட்டும்) கட்டிவிட்டு என் சட்டையின் உள் பாக்கெட்டுக்குள் கை விடப் போனான். நான் பரிதாபமாகப் பார்த்தேன்.

சட்டென்று சட்டையைப் பிளந்து கொண்டு என் மூன்றாம் கை வெளிப்பட்டு அவன் குரல்வளையைப் பிடித்தது. முகத்தில் மிரட்சி கொப்பளிக்க அவன் உதறி எழுந்து ஓடியே போனான். அப்புறம் ஒரு வழியாக வீடு போய் சேர்ந்தேன்.

இன்னும் சில தினங்களில் என் அதிசயக் கை பற்றி செய்திகள் வரலாம். டாக்டர் சத்யமூர்த்தி அண்ட் கோ செயற்கைத் தலையை (மூளையையும் சேர்த்துத்தான்) உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். எனவே இன்னும் சில காலம் கழித்து இன்னொரு கதை எழுதுவேன். அந்தக் கதையின் ஆரம்பம் இப்படி இருந்தால் பயந்துவிட வேண்டாம் : 'எனக்கு இரண்டு தலைகள். விடுதலை, தறுதலை - என்று, அமெச்சூர் கவிதை முயற்சியெல்லாம் இல்லை. நிஜமாகவே எனக்கு இரண்டு தலைகள்'.

அம்பலம்.காம்
15/04/2001

வம்சி புக்ஸ்
(மரப்பாச்சியின் சில ஆடைகள்)
2009




22 comments:

வெங்கிராஜா said...

சுஜாதா... சுஜாதா...
(யுரேகா... யுரேகா என்றும் பொருள்படும்)

யாத்ரா said...

ஆகா அருமை நந்தா

பா.ராஜாராம் said...

என் கைகளை(இரண்டை மட்டும்) தொடங்கி கதை முடிகிறது வரையில்
நகைச்சுவையின் உச்சம்,நந்தா.அற்புதமாக வந்திருக்கு.பாராட்டுக்கள்!

ஜெகநாதன் said...

நந்தா பிச்சுட்டீங்க! ​தொடருங்கள்! வாழ்த்துக்கள்!!! நானும் மூணு கால்கள்-னு ஒரு கதை எழுதலாமானா கால் ​மேல கால் ​போட்டு ​யோசிக்கிட்டு இருக்கேன். வலைப்பதிவுல ஏதும் ​சென்ஸார் இருக்கா?!?!?!?

Vidhoosh said...

:) காது வரை புன்னகைக்கிறேன் நந்தா.
நிறைய இரசித்தேன். ஆகா, அருமை, அருமை.

மண்குதிரை said...

வாவ் நல்லா இருக்கு நந்தா, நிறைய தவறவிட்டிவிட்டேன், வந்துவிட்டேன் வாசிக்கிறேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நந்தா, கதை நல்லா வந்திருக்கு.

ஜெகநாதன், அப்படில்லாம் எழுதக்கூடாது :)

அறிவிலி said...

நந்தா

வாவ்... அற்புதம்...அருமை

@ஜெகநாதன்... :)))))

Baski... said...

அருமையான கதை நந்தா.... தொடர்ந்து எழுதுங்கள்....வாழ்த்துக்கள்....

D.R.Ashok said...

நந்தா அருமை.... keep it up. :)

சேரல் said...

This one is too good :)

-priyamudan
sEral

Karthikeyan G said...

அருமை!!

விக்னேஷ்வரி said...

வித்தியாசமா இருக்கு. ரொம்ப நல்லாருக்கு.

Nundhaa said...

from வடகரை வேலன்
to nundhaa
date Fri, Jul 17, 2009 at 12:46 PM
subject மூன்றாம் கை
mailed-by gmail.com

அன்பின் நந்தா,

உங்கள் மூன்றாம் கை சிறுகதை, அற்புதமான ஒன்று.

முதல் வரியில் ஆரம்பித்த வேகம் கடசி வரை தொய்வில்லாமல் இருந்தது.

வாழ்த்துகள்.

தோழமையுடன்

வடகரை வேலன்.

ச.முத்துவேல் said...

INTELLIGENCE & VERY INTERESTING.
முதல்ல பயந்தேபோயிட்டேன் தெரியுமா?

"அகநாழிகை" said...

மிகவும் பிடித்திருக்கிறது நந்தா.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

பிரவின்ஸ்கா said...

அருமை .
முத்துவேல் அவர்களை போலத்தான் முதல்ல
கொஞ்சம் பயந்துட்டேன்.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

Nundhaa said...

வெங்கி, யாத்ரா, பா.ராஜாராம், ஜெகநாதன், விதூஷ், மண்குதிரை, ஜ்யோவ், சேரல், கார்த்தி, வேலன், முத்து, வாசு, பிரவின்ஸ்கா - மிக்க நன்றி

வெங்கி - Thanks for mentioning this as a good blog in one of Narsim's blog's comment

அறிவிலி, Baski, D.R.Ashok, விக்னேஷ்வரி - முதல் வருகைக்கும், கருத்துக்கும் - மிக்க நன்றி

அறிவிலி - Thanks for the Interesting Blog Award

ஜெகநாதன் - Thanks for thinking of giving the Interesting Blog Award

இந்தக் கதை தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக அம்பலம் இணைய அரட்டையில் தெரிவித்தார் சுஜாதா ... I was happy then and now ... :)

அனுஜன்யா said...

அட்டகாசம். இன்னமும் சிரித்துக்கொண்டே இருக்கேன்.

அனுஜன்யா

Nundhaa said...

அனுஜன்யா - மிக்க நன்றி

வேந்தன் said...

கதை அருமை.

Nundhaa said...

வேந்தன் - வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி